அணைகளில் நீர் திறப்பு குறைப்பு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது


அணைகளில் நீர் திறப்பு குறைப்பு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.

அணைப்பகுதியில் மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அந்த அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 979 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 58 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நேற்று முன்தினம் அணை பகுதியில் மழை குறைந்தது. பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 21 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணைக்கு 9 ஆயிரத்து 149 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரத்து 270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை

சேர்வலாறு அணைக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 814 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. ஆனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சேர்வலாறு அணையில் 7 மில்லி மீட்டர் மழை பதிவானது. 156 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 144 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 490 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 3,448 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதிக்கு வினாடிக்கு 1,255 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. கொடுமுடியாறு அணை நிறைந்ததால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி வந்த 200 கன அடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்டன.

மழை அளவு குறைந்ததால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. நேற்று முன்தினம் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் நேற்று சீரான வகையில் சென்று கொண்டிருந்தது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்த படி தண்ணீர் சென்றது. நேற்று மண்டபம் தெரியும் அளவுக்கு தண்ணீர் ஓடியது.

மரங்கள் சாய்ந்தன

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், ரெயில் நிலையம் முன்பு உள்ள பிள்ளையார் கோவில் அருகே உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் மரத்துக்கு கீழ் நின்று கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமாகின. அம்பை-கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் பழமையான ஆலமரம் சாய்ந்தது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -21, சேர்வலாறு -7, கடனா -18, ராமநதி -10, கருப்பாநதி -8, குண்டாறு -76, கொடுமுடியாறு -5, அடவிநயினார் -68, அம்பை -2.40, ஆய்குடி -1, சங்கரன்கோவில்- 3, செங்கோட்டை- 66, சிவகிரி- 1, தென்காசி- 12.40.

Next Story