கனமழை: அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.
தளி,
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்வதால் காட்டாறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 2-வது நாளாக அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டிவருகிறது.
இந்த வெள்ளம் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தபடி திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இதனால் கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளையும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீண்டும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைப்பகுதியில் 27 மில்லிமீட்டரும், நல்லாறு பகுதியில் 72 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளன. அணைக்கு பாலாறு மற்றும் காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 1,171 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 52.21 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 619 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது.
அதுபோல் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்வதால் அணைக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் 2-வது நாளாக அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆற்றில் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 85.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் அணைப்பகுதியில் நேற்று 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story