கல்லீரல், கணையம் நோய்கள் மற்றும் சிகிச்சை பற்றிய 2 நாள் கருத்தரங்கு சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் இன்று தொடங்குகிறது
கல்லீரல், கணையம் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய 2 நாள் கருத்தரங்கு சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
சென்னை,
சென்னை மியாட் ஆஸ்பத்திரி கல்லீரல் மற்றும் கணையம் நோய் சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் ஆர்.சுரேந்திரன், இரைப்பை, குடல் மற்றும் ஈரல் சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் ஏ.முரளி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மணப்பாக்கம் மியாட் ஆஸ்பத்திரியில் கல்லீரல் மற்றும் கணையம் குறித்த நோய்கள் பற்றியும், அவற்றின் சிகிச்சை முறை குறித்தும் 2 நாள் கருத்தரங்கு சனிக்கிழமை (இன்று) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த கருத்தரங்கில் கல்லீரல் மற்றும் கணையம் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது டாக்டர்கள் 600 பேர் கலந்துகொள்கிறார்கள்.
கல்லீரல் மற்றும் கணையம்
இந்த கருத்தரங்கில் கல்லீரல் மற்றும் கணையத்தில் வரும் புற்றுநோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை முறை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கில் ஆழ்ந்த அனுபவம் மற்றும் மிக சிக்கலான பிரச்சினைகள் பற்றி பகிரும் வகையில் தேசிய அளவில் நிபுணர்களை அழைத்துள்ளோம். கல்லீரல் மற்றும் கணையம் சிகிச்சை நிபுணர்கள் ஒருவருக்கு ஒருவர் அடையாளம் காண முடியும். கல்லீரல் மற்றும் கணைய சிகிச்சை நிபுணர்கள் அந்த நோயினால் நோயாளிகள் இறப்பின் விளிம்புக்கு சென்று அதில் இருந்து உயிருடன் மீண்டு வந்த சம்பவம் பற்றி கூறுவார்கள். இதன் காரணமாக இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மருத்துவ மாணவர்கள், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள், டாக்டர்கள் பயன்பெறுவார்கள்.
கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றில் 80 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பிறகே புற்றுநோயை கண்டுபிடிக்க முடியும். இந்த இரு உறுப்புகளில் ஏதேனும் கட்டி என்றாலும் அதை ‘ஸ்கேன்’ எடுத்து பார்ப்பது நல்லது.
புற்றுநோய் கட்டி
திருச்சி அருகே துறையூரை சேர்ந்த சாம்பமூர்த்தி (வயது 54) என்பவர் தனது கல்லீரலில் சிறிய கட்டி என்று தெரிந்தும் அதை பெரிதாக எடுக்கவில்லை. அவர் மியாட் ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்ததில் புற்றுநோய் கட்டி என்று தெரிந்தது. உடனே அந்த கட்டியை அறுவைசிகிச்சை செய்து நீக்கினோம். அந்த கட்டியின் எடை 2 கிலோ. அந்த கட்டியை நீக்கிய பிறகு அவர் நலமுடன் இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த சுபா (43) காசநோய்க்கு சிகிச்சை பெற்ற நிலையில் வயிற்றுவலியுடன் வந்திருந்தார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் கல்லீரல், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. உடனே அவருக்கு கல்லீரல் மற்றும் நுரையீரல் இரண்டிலும் அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். மது, புகை ஆகியவைதான் கல்லீரல் பாதிப்புக்கு உகந்த காரணம் என்று அறியப்படுகிறது. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (நாளை) மாலை முடிவடைகிறது.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின்போது மியாட் ஆஸ்பத்திரியின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story