15 வழக்குகளில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி கைது
கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் 15 வழக்குகளில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கோவை மாவட்ட போலீஸ் நிலையங்களில் விபசார வழக்கு, கஞ்சா வழக்கு என 15 வழக்குகள் உள்ளன. மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் 216 கிலோ கஞ்சா, பீளமேட்டில் 220 கிலோ கஞ்சா, ராமநாதபுரத்தில் 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் இவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இவர் மீது பெரியகடை வீதி, குனியமுத்தூர், சரவணம்பட்டி, வடவள்ளி உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் விபசார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பாலாஜி கோவையில் இருந்து வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 15 வழக்குகளில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பாலாஜி, கர்நாடக மாநிலம் அசோக்பூர்-தும்கூர் ரோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி. ஜீவரத்தினம் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கர்நாடகாவுக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலாஜி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story