சாலைகள் துண்டிப்பு : தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன


சாலைகள் துண்டிப்பு : தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன
x
தினத்தந்தி 18 Aug 2018 3:30 AM IST (Updated: 18 Aug 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மழை வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பொள்ளாச்சி,


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் மலம்புழா, இடுக்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மழையும் விடாது பெய்வதால் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆங்காங்கே நிலச்சரிவு, மரங்கள் விழுந்தன. சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கேரளாவுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவை சுமார் 2 கிலோ மீட்டர்தூரத்துக்கு நீண்ட வரிசையில் நிற்கின்றன. தமிழக பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி அருகே கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி ஆகிய சோதனை சாவடிகள் வழியாக செல்லும் லாரிகளை போலீசார் நிறுத்தி வைத்து உள்ளனர்.

இதன் காரணமாக காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. முன் அறிவிப்பு இன்றி லாரிகள் நிறுத்தப்பட்டதால் டிரைவர்கள், கிளனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதுபோல் கேரளாவிற்கு சென்ற லாரி உள்ளிட்ட வாகனங்கள் திரும்ப வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த டிரைவர்கள் லாரியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் கேரளா செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து திருச்சூர், குருவாயூர் போன்ற பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாலக்காட்டிற்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக எல்லையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கூடுதல் செலவு ஆகிறது. எனவே கேரள அரசு போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று டிரைவர்கள் தெரிவித்தனர். 

Next Story