விசாரணைக்கு அழைத்து சென்ற டிரைவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
திருவள்ளூர் அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற டிரைவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காயம் அடைந்தவரை சாலையில் படுக்க வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குணா (வயது 28). கார் டிரைவர்.
புதுமாவிலங்கையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருடியதாக குணா மீது கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் குணாவை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
வீட்டுக்கு வந்த குணா தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் தன்னை போலீசார் தாக்கியதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குணாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு குணாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரம்பாக்கம்-கடம்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த குணாவையும் சாலையில் படுக்க வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காயமடைந்த குணாவை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு போலீசார் கூறினர்.
பேச்சுவார்த்தை
அதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள், குணாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும், அவரையும் சிகிச்சைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் குணாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story