மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு


மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 3:10 AM IST (Updated: 18 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. அப்போது இரு தரப்பு உறவினர்களும் போலீஸ் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரியை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மகள் ஜானகி (வயது 20). இவரை காணவில்லை எனக்கூறி அவரது தந்தை மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் ஜானகியும், வேடந்தாங்கல் காலனியை சேர்ந்த அஜித் (22) என்பவரும் நேற்று இரவு மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவீட்டார் மற்றும் அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண் தனது கணவருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஜானகியை, அஜித்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீஸ் நிலையத்துக்கு வெளியேயும் இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் உள்ள சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story