பலத்த காற்றுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து தரைமட்டம்


பலத்த காற்றுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து தரைமட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:15 AM IST (Updated: 18 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே பலத்த காற்று வீசியதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து தரைமட்டமானது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்சி முனியப்பன் கோவில் முன்பு உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த தொட்டி கட்டப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பதால் அடிப்பகுதி சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு இருந்தது. இத்தொட்டியை அகற்றவேண்டும் என்று பலமுறை ஒட்டன்சத்திரம் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் கீழ்பகுதி தூண்கள் உடைந்து சில நிமிடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் முழுவதும் வீணானது. இதனால் கோடாங்கிபட்டியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்க தொட்டி அருகே அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. பகல் நேரத்தில் தொட்டி இடிந்து விழுந்திருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்து உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக இரவு நேரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story