கேரளாவுக்கு ரூ.10 லட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள்


கேரளாவுக்கு ரூ.10 லட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:19 AM IST (Updated: 18 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் பலத்த சேதமடைந்த கேரள மாநிலத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள், திண்டுக்கல்லில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல், 


கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன. மேலும் நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி கோரப்பட்டது. கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த பொருட்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பொருட்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டன. இதையடுத்து அவை லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை கலெக்டர் டி.ஜி.வினய் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறும்போது, கேரளாவில் கனமழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் அந்த மாநில மக்களுக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி, எண்ணெய், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், போர்வை, துண்டு, உடைகள், எழுது பொருட்கள், நோட்டுகள், நாப்கின் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும், என்றார்.

இதேபோல திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவக்குழு ஒன்றும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பிரசன்னா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினரை, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் வழியனுப்பி வைத்தார். ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story