கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூருவில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி
கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூருவில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூருவில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலர்தூவி அஞ்சலி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். கர்நாடக பா.ஜனதா சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா தலைவர்கள் ஆர்.அசோக், சங்கரமூர்த்தி, ராமச்சந்திரகவுடா, சோமண்ணா உள்பட பலர் கலந்து கொண்டு, வாஜ்பாயின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் பேசுகையில், “பா.ஜனதாவில் நாம் இன்று பல்வேறு பதவிகளில் இருக்கிறோம். இதற்கு வாஜ்பாய் தான் காரணம். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பாகிஸ்தான் மக்கள் என அனைவரும் வாஜ்பாய் புகழ் பாடுகிறார்கள். அதனால் தான் அவர் அரசியல் எதிரிகளின் நன்மதிப்பை பெற்றார்“ என்றார்.
மதிப்பை உயர்த்தினார்
அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி., “வாஜ்பாய் ஒரு மாபெரும் தலைவர். அவர் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தினார். வாஜ்பாய்க்கு நிகர் வாஜ்பாய்தான். வாஜ்பாய் இருந்த பா.ஜனதாவில் நாம் இருக்கிறோம் என்பதே நமக்கு புண்ணியம். அவர் மிக சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார்“ என்றார்.
பா.ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பொதுமக்கள் பலரும் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு ஒரு போலீஸ் மோப்ப நாய் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு கீழே குனிந்தும், 2 கால்களை தூக்கியபடியும் அஞ்சலி செலுத்தியது. இந்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது. நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வாஜ்பாய் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story