ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:05 PM GMT (Updated: 17 Aug 2018 11:05 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் ஆய்வு நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தினார். ஊட்டமலை, தலவுகொட்டாய், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்த குடியிருப்புகளை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உதவி கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தாசில்தார் அழகு சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், கிருஷ்ணன் ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே காவிரி கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்வதையோ, ஆற்றின் கரைகளில் நின்று செல்பி எடுப்பதையோ முழுமையாக தவிர்க்க வேண்டும். வெள்ளநீரால் பாதிக்க வாய்ப்புள்ள 20 வீடுகளை சேர்ந்த 130 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையில் ஆற்று நீர் புகுந்த பகுதிகளில் மாற்று சாலை ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் அதிக நீர் வரும் காலங்களில் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குட்டைகளில் நிரப்புவதற்கான திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற பொறியாளர்கள் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத்தலைவர் வேலுமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபால், மதியழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பொன்னுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story