ஈரோடு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள் 100 பேர் வருகை


ஈரோடு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள் 100 பேர் வருகை
x
தினத்தந்தி 17 Aug 2018 11:30 PM GMT (Updated: 17 Aug 2018 11:30 PM GMT)

ஈரோடு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு வீரர்கள் 100 பேர் வந்து பணியில் ஈடுபட்டு இருப்பதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.

எனவே பவானி கூடுதுறையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இந்த வெள்ளம் கொடுமுடிவரை பெருகி ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மேலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் வந்து உள்ளனர். மொத்தம் 100 வீரர்கள் ஈரோடு மாவட்டத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சத்தியமங்கலம், பவானி, மொடக்குறிச்சி என 3 பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பவானிசாகர் அணை முதல் கொடுமுடி வரை இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்காக தற்போது 24 மணி நேரமும் செயல்படும் புதிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிவாரண முகாம்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாட்டு அறையில் உதவி இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி தலைமையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுகிறார்கள். எனவே வெள்ளபாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு எந்த நேரமும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

ஈரோடு காலிங்கராயன் பாளையம், கருங்கல்பாளையம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளையும், நிவாரண முகாம்களையும் கலெக்டர் நேற்று காலை பார்வையிட்டார்.

Next Story