தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - கலெக்டருக்கு கோரிக்கை


தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2018 11:40 PM GMT (Updated: 17 Aug 2018 11:40 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம்,

நாட்டுப்படகு சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும், 301 விசைப்படகுகளும் உள்ளன. திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விசைப்படகுகளும், மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளும் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். அதே சமயம் மீன் இனப்பெருக்கம் அழிந்துவிடும் என கருதி அரசு இரட்டைமடி வலை, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய தடைவிதித்துள்ளது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒருசில விசைப்படகுகள் தடையை மீறி இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி இரட்டைமடி வலை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தி தர மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு இட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story