ஆபத்தில் உதவும் நண்பன் ‘டிரோன்’


ஆபத்தில் உதவும் நண்பன் ‘டிரோன்’
x
தினத்தந்தி 18 Aug 2018 7:20 AM GMT (Updated: 18 Aug 2018 7:20 AM GMT)

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை நாம் நன்கு அறிவோம். தற்போது அதுபோன்ற வெள்ளத்தில் சிக்கி கேரள மாநிலம் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

வெள்ள நீர் சூழ்ந்து நிற்க உயிர் தப்புவதற்காக வீடுகளின் கூரை மீதும், மொட்டை மாடி மீதும் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். பலர் பாறைகள், மலை முகடுகள், மரக்கிளைகளில் தஞ்சம் அடைந்திருக்கக் கூடும். வன விலங்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

இப்படி ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை பயன்படுத்தலாம் என்றால், மோசமான வானிலை நிலவும்போது ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாது. விமானங்களை பயன்படுத்துவது முடியாத காரியம்.

வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதியில் உயிருக்கு போராடுவோருக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் போடப்படும் உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்து பொருட்கள் சரியான இடங்களில் விழுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் ஆளில்லாமல் தானாக பறக்கும் ‘டிரோன்’ என்னும் குட்டி விமானங்களை பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும். இவற்றை வெள்ளப் பாதிப்புக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த டிரோன்களில் ஜி.பி.எஸ். என்னும் இடம் அறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், இலக்கை சரியாக அடைய முடியும். இவற்றின் இயக்கத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்தலாம். இதனால் சரியான இடத்தில் டிரோன்களை இறங்க செய்யலாம்.

இவற்றில் உணவுப் பொருட்களையோ, மருந்துப் பொருட்களையோ வைத்து வெள்ளம் சூழ்ந்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு நேரடியாக கொடுக்க முடியும்.

இந்த டிரோன்களை அனைவருமே பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. சில திருமண வீடுகளில் அந்தரத்தில் பறந்தபடி திருமண நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்கும் ஒரு குட்டி விமானம் டிரோன்களில் ஒரு வகை ஆகும்.

மிகச் சிறிய வகை டிரோன்களை உள்ளங்கையில் இருந்தே பறக்க வைக்க முடியும். ‘டி.ஜே.ஐ. மவிக் ஏர்’ எனப்படும் டிரோன்களை கையை அசைத்தே இயக்க முடியும் என்பது வியப்பாக உள்ளது. இவை படுக்கையில் உள்ள நோயாளிகளுக்காகவும் படுகாயமுற்று பனிமலைகளில் தவிக்கும் ராணுவ வீரர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டது. குறைந்தபட்சம் கைகளை அசைக்க முடிந்தாலே போதும் உதவி கிடைக்கும்.

டிரோன்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்க்க மனிதர்களுக்கு பதிலாக டிரோன்களை பயன்படுத்த உள்ளன.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் எதிரிப்படைகள் மற்றும் பயங்கரவாதிகளின் ஊடுருவலை கண்காணிக்கும் பணியை இரவு பகலாய் தொய்வின்றி கண்காணிக்க இவை உதவுகின்றன. யாரும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு டிரோன்களை அனுப்பி படங்கள், வீடியோக்கள் எடுக்க முடியும் என்பதால், பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகளுக்கும் இவற்றின் தேவை இருக்கிறது.

டிரோன்களில் பொருத்தப்படும் புறஊதாக் கதிர்கள் இரவிலும் பார்க்கும் தன்மை கொண்டவை என்பதால், காடுகளில் மாட்டிக்கொண்டவர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்கள், தீப்பற்றி எரியும் பகுதிகளில் மாட்டிக்கொண்டவர்களை தேடுவதற்கு இரவிலும் கைகொடுக்கும். வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டால், உயிர்காக்கும் மருந்துகளை நோயாளிக்கு டிரோன் மூலம் அனுப்பிவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இவை எடை குறைவாகவும் எளிதில் அதிக உயரத்தில் பல திசைகளில் பறக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு தகுந்த பாலிமர் கூட்டுப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் புறஊதாக்கதிர்கள் கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் லேசர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. வெளியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்படுகின்றன.

டிரோன்களின் மூக்கு பகுதியில் உணர்வு பொறிகள் மற்றும் பறக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் அதிர்வை தாங்கக்கூடிய, அதிக சத்தம் தராத எடை குறைவான பொறியியல் சார்ந்த பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமராக்களால் நேரடியாக படங்களை அனுப்ப முடியும். ஏறத்தாழ 7 கி.மீ. சுற்றளவுக்கு இந்த வீடியோ படங்களை பார்க்க முடியும். டிரோன்கள் எந்த ஒரு பொருளின் மீதும் மோதாமல் செல்லும். எதிரே ஏதேனும் மலை போன்ற பொருட்கள் இருந்தால் வழியை மாற்றி கொள்ளும் திறனும் கொண்டவை.

இவற்றில் நான்கு கால்கள் போன்ற அமைப்பு உண்டு. இந்த டிரோன்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை தருவதற்கு லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகளைத் திரும்பத் திரும்ப மின்னேற்றம் செய்ய முடியும். அனேக வகை டிரோன்கள் 25 நிமிடம் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டவை.

இந்த டிரோன்களால் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலே பறக்கும் ஆகாய விமானங்களுக்கும், விமான ஓட்டிகளுக்கும் இவை பெரும் இடைஞ்சலாக கருதப்படுகிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கனடாவில் உள்ள கியூபக் என்னும் நகரத்தில் ஆகாய விமானத்தோடு மோதி பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

இத்தகைய டிரோன்களின் வழியாக அபாயகரமான வெடிபொருட்கள் போன்றவற்றை எடுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் போட முடியும் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் பயங்கரவாதிகள் கையில் இவை தவறாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்திய விமானத்துறை இதற்கான சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி 250 கிராம் எடைக்கு குறைவான நானோ டிரோன்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதற்கான பயிற்சியை மேற்கொண்ட பின்னர் அனுமதி பெற்று டிரோன்களை பறக்கவிடலாம். ஆனாலும் மிக முக்கியமான பாதுகாப்பு இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இவற்றை பறக்கவிடக்கூடாது.

இருந்தபோதிலும் பேரிடர் ஏற்படும் நேரங்களில் மருத்துவ உதவிக்கு இவை பெரிதும் பயன்படும் என்பதால் இந்திய விமானத்துறை அமைச்சகம் டிரோன்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது பாராட்டுக்குரியது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதிகளவில் டிரோன்களை தயாரிக்கின்றன. சீனாவும் டிரோன்களை தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறது. தற்போது, இந்தியாவிலும் டிரோன்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. பொறியியல் கல்லூரிகளில் இது பற்றிய பாடங்களும், மாதிரி டிரோன்கள் தயாரிப்பும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- முனைவர் எஸ்.பாலக்குமார்

Next Story