கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்


கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:31 PM IST (Updated: 18 Aug 2018 3:31 PM IST)
t-max-icont-min-icon

தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன.

கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது.

சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?

அதற்கான ஆலோசனைகள் இதோ...

சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது

ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.

உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

வலுவான ‘பாஸ்வேர்டு’

புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.

வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

பொது இடங்களில்...

பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.

உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.

‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.

பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.

எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள். 

Next Story