4 நாட்களாக வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை: மழை வெள்ளம் வடியாததால் வாவறை ஊராட்சி மக்கள் அவதி


4 நாட்களாக வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை: மழை வெள்ளம் வடியாததால் வாவறை ஊராட்சி மக்கள் அவதி
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 18 Aug 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

வாவறை ஊராட்சி பகுதியில் மழை வெள்ளம் வடியவில்லை. இதனால் 4 நாட்களாக அவர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர்.

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் கடந்த 14–ந் தேதி அன்று கனமழை பெய்தது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடித்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த உபரிநீர் மற்றும் கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதன் கரையோரம் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. நித்திரவிளை பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிக்கல் அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 4 நாட்களாகியும் வாவறை ஊராட்சியில் பனமுகம், வடுவூர் தோட்டம், மாமுகம், தோட்டம், பள்ளிக்கல் பகுதி வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடியவில்லை. மேலும் 3 அடி உயரத்துக்கு வீடுகளை சூழ்ந்த நிலையில் மழை வெள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 80–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பள்ளிக்கல் அரசு பள்ளி முகாமில் உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் நித்திரவிளை பகுதியில் காலையில் இருந்து மதியம் வரை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வாவறை பகுதியை ஒட்டி உள்ள வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

வீடுகளை சூழ்ந்த தண்ணீரை, கால்வாய் வழியாகத்தான் வெளியேற்ற முடியும். ஆனால் கால்வாயிலும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் தற்போது அது சாத்தியமானதாக இல்லை. மழை நின்று, கால்வாயிலும் தண்ணீர் குறைந்தால் மட்டுமே வாவறை பகுதியை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற முடியும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதுவரைக்கும் வாவறை பகுதியை சேர்ந்தவர்கள் முகாமில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இதற்கிடையே நித்திரவிளை பகுதியில் வெள்ளம் வடிந்த கிராமங்களில் மழை வெள்ள சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

Next Story