திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற நடவடிக்கை மருத்துவ அதிகாரி தகவல்


திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற நடவடிக்கை மருத்துவ அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2018 2:30 AM IST (Updated: 19 Aug 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

மருத்துவ அதிகாரி ஆய்வு

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சென்னை மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ருக்மணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தாலுகா தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 120 படுக்கை வசதி உள்ளது. இங்கு தினமும் 700 முதல் 800 நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இங்குள்ள 17 டாக்டர் பணியிடங்களில் 4 டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதில் புதிதாக படித்து முடித்த டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 15 நாட்களில் அவர்கள் பணியில் சேர்வார்கள்.

இங்கு ஒரு ரத்த சுத்திகரிப்பு கருவி (டயாலிசிஸ்) செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதலாக ஒரு ரத்த சுத்திகரிப்பு கருவி வந்துள்ளது. இதற்கு தேவையான மற்றொரு உபகரணம் வந்ததும், அந்த கருவி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தேசிய தரச்சான்று பெற...

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியை தேசிய தரச்சான்று பட்டியலில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு பணியாற்றும் டாக்டர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிகளை தேசிய தரச்சான்று பட்டியலில் சேர்க்க இந்த ஆண்டு தேர்வு பட்டியலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தேசிய தரச்சான்று தேர்வில் தகுதிபெறும் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மத்திய அரசு நேரடியாக ஆஸ்பத்திரிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதனை ஆஸ்பத்திரி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5 கோடியே 16 லட்சம் செலவில் புதிய 2 மாடி கட்டிடம் விரைவில் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷெரின், தலைமை டாக்டர் பொன் ரவி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story