வேலூர் ரங்காபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு


வேலூர் ரங்காபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 19 Aug 2018 3:45 AM IST (Updated: 19 Aug 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ரங்காபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இருந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் ரங்காபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் எதிரே வசிப்பவர் ஆறுமுகம். இவர், சத்துவாச்சாரி கிழக்கு பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம், ரூ.1½ லட்சம் மதிப்பிலான புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் வீட்டு வாசலின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை வழக்கம்போல் தனது வீட்டு வாசலின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர் அவர் தனது வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. 16-ந் தேதி நள்ளிரவு ‘ஹெல்மெட்’ அணிந்தபடி ஒரு நபரும், முகத்தை மறைக்காமல் ஒரு நபரும் வீட்டிற்கு வருகின்றனர். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளின் பூட்டை நூதனமாக உடைத்து, எவ்வித பதற்றமும் இல்லாமல் சாவகாசமாக அதனை திருடிச் செல்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஆறுமுகம் நேற்று சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் எதிரிலேயே நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story