தாமிரபரணி உபரி நீரை குளங்களுக்கு திறந்து விட வேண்டும் கலெக்டரிடம், பா.ஜனதா கோரிக்கை
தாமிரபரணி உபரி நீரை குளங்களுக்கு திறந்து விட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், பாரதீய ஜனதா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை,
தாமிரபரணி உபரி நீரை குளங்களுக்கு திறந்து விட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், பாரதீய ஜனதா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலெக்டரிடம் மனுபாரதீய ஜனதா கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் ராமராஜ் பாண்டியன், பணிநாதன், மகராஜன், கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு மழை கை கொடுத்துள்ளது. கனமழை பெய்ததால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கடந்த 4 நாட்களில் 6 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஊர்களில் இன்னும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது.
குளங்களுக்கு திறந்து விட வேண்டும்நெல்லை மாவட்டத்தில் சுமார் 2,200 குளங்கள் உள்ளன. இதில் 1,000–த்துக்கும் மேற்பட்ட குளங்கள் இன்னும் நிரம்பவில்லை. தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளங்களுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.