டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
கோவை பி.என்.புதூரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
வடவள்ளி,
கோவை–வடவள்ளி சாலையில் பி.என்.புதூர் சென்னி ஆண்டவர் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும், இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1–ந்தேதி டாஸ்மாக் மதுக்கடை இங்கு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனிடையே அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சென்னி ஆண்டவர் நகர், மாரியம்மன் கோவில் வீதி, தியாகி குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அப்பகுதி மக்கள் தங்களது கைகளில் கருப்பு கொடியை பிடித்தபடி சென்னி ஆண்டவர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பாக்கியராஜ், தங்கதுரை உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–
சென்னி ஆண்டவர் நகரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மாலை நேரங்களில் பெண்கள், குழந்தைகள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே இங்கு திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.