கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்தார்
கன மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை லாரிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்தார்.
கோவை,
தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 350 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை, கோவை வியாபாரிகள் சங்கம், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலசங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் 21 லாரிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றை கேரளாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகளை சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடி அசைத்து அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பருவமழையின் தீவிரம் காரணமாக கேரள மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக முதல்– அமைச்சர் உடனடியாக கேரள மாநில முதல்–மந்திரியை தொடர்பு கொண்டு சேத நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதோடு வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்டமாக ரூ.5 கோடியும், 2–ம் கட்டமாக ரூ.5 கோடி அளித்ததுடன், 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் லாரிகளின் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, கோவை, நாமக்கல், திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட அரிசி, பருப்பு வகைகள், பால்பவுடர், காபி மற்றும் டீத்தூள் சர்க்கரை, உப்பு, மிளகாய்தூள், ரொட்டி, பிஸ்கட், சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வெங்காயம் என ரூ.2 கோடி மதிப்பிலான 42 அத்தியாவசிய பொருட்கள் 21 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் பிற அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழக முதல்–அமைச்சரின் உத்தரவின்படி, கேரள மாநில எல்லை பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு இயல்பு நிலை திரும்ப தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.