தொடரும் கனமழையால் கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் மண் சரிவு


தொடரும் கனமழையால் கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் மண் சரிவு
x
தினத்தந்தி 19 Aug 2018 3:45 AM IST (Updated: 19 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கனமழை தொடர்வதால், கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாண்டியாறு, மாயார், பொன்னானி, ஓவேலி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் கடந்த 15–ந் தேதி இரவு 7 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது. மேலும் ராட்சத பாறைகளும் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் 16 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

இதையொட்டி கூடலூர்– ஊட்டி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் கோவை கோட்ட பொறியாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், இளநிலை பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் ஊட்டி மலைப்பாதையில் பல இடங்களில் 500 மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1½ மணிக்கு அனுமாபுரம் என்ற இடத்தில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் மண் குவியல்களை அகற்றினர். மேலும் மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் அந்த வழியே 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இதனிடையே தொடர் மழையால் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், கர்நாடகா பகுதிகளில் இருந்து வந்த சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அதே சாலையில் நேற்று மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அங்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரீன் சுல்தான் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். பின்னர் விரிசல் ஏற்பட்ட இடங்களை சுற்றிலும் தடுப்பு கம்பிகள் வைத்து, ஒருபுறமாக குறைந்தளவு எடை கொண்ட சரக்கு லாரிகள், பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 6 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரிகள், பஸ்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் கூடலூர்– கேரள சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் விரிசல் ஏற்பட்ட இடத்தின் மேற்புறத்தில் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் ராட்சத பாறைகள் உள்ளன. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.

கூடலூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் சிங்காரா, பைக்காரா மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டது. மேலும் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை வனம் வழியாக கூடலூர், பந்தலூர் தாலுகாவுக்கு செல்லும் உயர் கோபுர மின் அழுத்த கம்பிகள் பல இடங்களில் நேற்று முன்தினம் மாலை 4½ மணிக்கு அறுந்து விழுந்தன. மேலும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அடர்ந்த வனத்துக்குள் சென்று சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டது.

பின்னர் நேற்று கொட்டும் மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் முதுமலை வனத்துக்குள் சென்று உயர் மின் அழுத்த கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்கோபுரங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்தனர். இதை தொடர்ந்து மாலை 6½ மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் 15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் இன்றி கூடலூர் பகுதி மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.


Next Story