டிரைவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஆஸ்பத்திரி முற்றுகை
திருவள்ளூர் அருகே போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குணா (வயது 28). கார் டிரைவர். இவர் புதுமாவிலங்கையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருடியதாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குணாவை விசாரணைக்காக போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் குணாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காயம் அடைந்த குணாவை சாலையில் படுக்க வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்களின் 3 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் குணாவை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைசெயலாளர் செஞ்சி குமார், மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாநில நிர்வாகி கேசவன், ஒன்றிய செயலாளர் கேசவன் மற்றும் ஏராளமான பா.ம.க.வினர் குணாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் குணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கார் டிரைவரை தாக்கிய போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பா.ம.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story