மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மகன்காளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை ஆர்.கே.பேட்டை பஜாருக்கு சென்றார். அங்கு பத்திரபதிவு அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவரது நண்பர் அங்கு வந்தார். அவரை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளில் சாவியை எடுக்காமல் கீழே இறங்கி நின்று நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் அலறியபடி திருடனை பிடிக்க ஓடினார். இதை பார்த்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து ஆர்.கே.பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் வேலூர் மாவட்டம் எசையனூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story