பொன்னேரி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு


பொன்னேரி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2 அரசு பஸ்களை சிறைபிடித்தனர்.

பொன்னேரி, 

பொன்னேரி அருகே கம்மவார்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது. மின்மோட்டார்கள் மூலம் கொண்டு செல்லப்படும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக ஆழ்துளை கிணறு பழுது அடைந்ததால் குடிநீர் வழங்க முடியாத நிலை உருவானது. இது குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவிடம் ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் புகார் செய்தார். ஆரணி ஆற்றில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

அப்போது சின்னகாவனம் பகுதியை சேர்ந்த சிலர் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தடைபட்டது.

மறியல்

இதனால் கம்மவார்பாளையம் ஊராட்சி முழுவதும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் கம்மவார்பாளையம் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் பொன்னேரி- பெரும்பேடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2 அரசு பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெரும்பேடு ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் மூலம் இணைத்து உடனடியாக குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் சின்னகாவனம் அருகே ஆரணி ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு பொன்னேரி வருவாய்த்துறை உதவியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story