கேரளாவில் மக்கள் மழையால் தவிப்பு: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் குவிந்தன


கேரளாவில் மக்கள் மழையால் தவிப்பு: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் குவிந்தன
x
தினத்தந்தி 19 Aug 2018 4:45 AM IST (Updated: 19 Aug 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மழை வெள்ளத்தில் மக்கள் தவிப்பதால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த நிவாரண பொருட்கள் 6 மணி நேரத்துக்கு ஒரு லோடு என்று கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது.

நாகர்கோவில்,

கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் பெருத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைவெள்ளத்தில் கேரள மக்கள் தவிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உணவு, உடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் பல்வேறு இடங்களில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பொதுமக்கள் மனமுவந்து முன்வர வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து பல்வேறு வணிக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து நிவாரண பொருட்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வரத் தொடங்கின. மினி லாரிகள், டெம்போக்கள் மற்றும் ஆட்டோக்களில் இந்த நிவாரண பொருட்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது அரிசி, காய்கறிகள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி, சாக்லேட், மருந்துகள், மாவு, பால், சேலை, பேன்ட், துண்டு உள்ளிட்ட பொருட்கள் குவிந்தன. மேலும் பொதுமக்களும் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் பாய், போர்வை உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து வழங்கினர்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் குவித்து வைக்கப்பட்டன. பின்னர் அவற்றை தனித்தனியாக பிரித்து பார்சல் செய்யும் பணி நடந்தது. ஒரு பார்சலில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கியிருந்தன. பின்னர் அவை மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. 6 மணி நேரத்துக்கு ஒரு லோடு என்ற வீதத்தில் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நிவாரண பொருட்களை பிரித்து பார்சல் செய்யும் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக பணியாளர்களும் இந்த பணியை செய்தனர்.

அதோடு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி மற்றும் அதிகாரிகளும் நிவாரண பொருட்களை பார்சல் செய்தனர். விஜயகுமார் எம்.பி.யும் அங்கு முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அவரும் ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டார். பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படியும் கூறினார். அப்போது கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 1077 என்ற இலவச தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார். பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனில் 04652-231077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். நாகர்கோவில் நகராட்சி சார்பிலும் நேற்று கேரள மக்களுக்கு 2 மினி லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story