‘‘நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் ஆட்சி தொடருகிறது’’ சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிறகு டி.டி.வி. தினகரன் பேட்டி
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அவர் ‘நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் ஆட்சி தொடருகிறது‘ என்று குற்றம்சாட்டினார்.
சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், நேற்று சசிகலாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
பின்னர், அவர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்த சந்திப்புக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
பணம் வீணடிப்புகர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணம், தூர்வாரும் பணி என்ற பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். இதற்கு மாறாக, தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு ஒருபோதும் செய்யாது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே 400 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரி நிரம்பினால் அந்த பகுதி முழுவதும் பாசன வசதி பெறும். ஆனால் அது மேய்ச்சல் நிலமாகவே உள்ளது. தமிழக அரசின் தூர்வாரும் நிதி சிலரது உறவினர்கள் பெயரில் போட்டு செலவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஊழல் திட்டம்ஊழல் செய்வதற்கான ஒரு திட்டம் என்று கூறினால் அது தமிழக அரசின் தூர்வாரும் திட்டம் தான். தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் குக்கர் சின்னம் தான் வெற்றி பெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. கால சூழலால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும்அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது ஒன்றும் நடக்காது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கூறினார். அது நடைபெறவில்லை. கேரளாவில் நல்ல பண்புகள் உள்ளன. வெள்ளப்பிரச்சினையில் முதல்–மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். யானை பசிக்கு சோளப்பொறி போன்று அல்லாமல் அவர்களின் தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.