பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் சேர்ந்து வாழமுடியாததால் விபரீத முடிவு


பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் சேர்ந்து வாழமுடியாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 Aug 2018 3:45 AM IST (Updated: 19 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே கணவருடன் சேர்ந்து வாழமுடியாததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் மெஜலந்தி (வயது 30). இவருக்கும், தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்(35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் என்ஜினீயர் ஆவர். இவர்களுக்கு 6 வயதில் மகளும், 2½ வயதில் மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன் மெஜலந்தி, கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன், கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தில் உள்ள தாயார் சுசீலா வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் மெஜலந்தி, தூத்துக்குடி சென்று கணவர் முத்துக்குமாருடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தார். ஆனால், அதற்கு முத்துக்குமார் சம்மதிக்காததால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் குழந்தைகளுடன் கன்னியாகுமரி திரும்பிய மெஜலந்தி, வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவரை மீட்டு காப்பாற்றினர்.

பின்னர், அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். ஆனாலும், கணவருடன் சேர்ந்து வாழாததால் சோகத்துடன் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று மதியம் சுசீலா வெளியே சென்றிருந்தார். குழந்தைகள் இருவரும் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தனர். மெஜலந்தி மட்டும் வீட்டிற்குள் தனியாக இருந்தார்.

சிறிது நேரம் கழித்து சுசீலா வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, உள்ளே மெஜலந்தி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். பின்னர், இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்ஜெயின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சுசீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவருடன் சேர்ந்து வாழமுடியாததால் மெஜலந்தி இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

Next Story