கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு,
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைகர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, கார்வார், தட்சிணகன்னடா மாவட்டங்களிலும், மலைநாடுகளான குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வற்றாத ஜீவநதியான காவிரியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் கடந்த 2 மாதத்தில் 2 முறை முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கபினி, கே.ஆர்.எஸ். அணைகள்இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2.46 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழ்நாடு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடைந்தது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 279 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 627 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 2,280 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்புஇதனால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 627 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதன்காரணமாக காவிரி, கபிலா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், நஞ்சன்கூட்டில் ஊட்டி–மைசூரு சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, சுத்தூர் பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது. கபிலா ஆற்றங்கரையையொட்டி இருக்கும் மரலூர், கொத்தனபுரா, சிக்கய்யன சந்திரா, பஞ்சள்ளி, கெம்பி சித்தனஉண்டி, பொக்கள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், அங்கு சாகுபடி செய்திருந்த பயிர்கள் நாசமாகின.