எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் பதிவோருக்கு ஒரே பதிவு மூப்பு கலெக்டர் மலர்விழி தகவல்


எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் பதிவோருக்கு ஒரே பதிவு மூப்பு கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை வருகிற 30–ந்தேதி வரை பள்ளிகளில் பதிவு செய்வோருக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும்.

தர்மபுரி,

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–மாணவிகள் தங்கள் கல்வித் தகுதியினை அவர்கள் படித்த பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே நேரடியாக இந்த துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியதால் மாணவ–மாணவிகளுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு 2018–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 30–ந்தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஒரே பதிவு மூப்பு தேதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ–மாணவிகள் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவினை மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவ–மாணவிகள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி அங்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவ–மாணவிகள் மதிப்பெண் சான்றிதழை பதிவு செய்யும்போது ஆதார்அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவை மேற்கொள்ளலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ–மாணவிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story