முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக்கூடாது - வைகோ பேட்டி


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக்கூடாது - வைகோ பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2018 5:00 AM IST (Updated: 19 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கக்கூடாது என்று ஈரோட்டில் வைகோ கூறினார்.

ஈரோடு,

பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, ம.தி.மு.க. வெள்ளி விழா மற்றும் வைகோ–வின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மூலக்கரை பிரிவு என்ற இடத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15–ந் தேதி மாநாடாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

அடுத்த மாதம் 15–ந் தேதி ம.தி.மு.க.வின் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய அரசியலில் தற்போதைய நிலையில் இந்த மாநாடு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு தடுப்பணைகளை கட்டாததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாராமல் அரசு விட்டு விட்டது.

இதனால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை கூட சென்று சேரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு சென்றாலும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்ற சூழல் நிலவி வருகின்றது.

முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கூடாது. மேலும் அணையில் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று கொள்ளக்கூடாது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் நீதிபதிகளுக்கு உரிய இருக்கைகள் அமைக்காதது வருத்தமளிக்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.


Next Story