8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வங்கிக்கு பூட்டுப்போட்ட நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது


8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வங்கிக்கு பூட்டுப்போட்ட நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோபியில் வங்கிக்கு பூட்டுப்போட்ட நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோபியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி,

சேலம்– சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விவசாயிகளை மிரட்டி அவர்களுடைய நிலங்களை கையகப்படுத்துவதை வருவாய்த்துறையினரும், மாநில அரசும் உடனே நிறுத்த வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரை ஓடத்துறை, பி.மேட்டுப்பாளையம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள குளங்களுக்கு கொண்டு சென்று நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செழியன் தலைமையில் மொத்தம் 11 பேர் கோபியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்சிக்கொடிகளை கையில் ஏந்தியபடி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் திடீரென அவர்கள் வங்கியின் கேட்டை இழுத்து மூடி பூட்டுப்போட்டனர். மேலும் வங்கி முன் பகுதியில் இருந்த டியூப்லைட்டுகளையும் உடைத்தனர்.

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கோபி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story