ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை


ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பெண்களிடம் நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள்நகரை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (வயது 75). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென ஜெகதாம்பாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்தார்.

இதில் சுதாரித்துக்கொண்ட ஜெகதாம்பாள் கையால் சங்கிலியை பிடித்தபடி கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் அறுந்த பாதி சங்கிலியுடன் அந்த நபர், மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு நபருடன் மின்னல்வேகத்தில் தப்பிச் சென்றார். பறிபோன பாதி தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இது குறித்த தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகையை பறிகொடுத்த ஜெகதாம்பாளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கடலூர் வண்டிப்பாளையம் சாலை மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் அகிலபிரியா(33). இவர் நேற்று காலை தனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வேனில் அனுப்பி வைப்பதற்காக அருகில் உள்ள சிவாநகருக்கு வந்தார்.

பின்னர் பிள்ளைகளை வேனில் ஏற்றி விட்டு வீடு திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் அகிலபிரியா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார். இதைத்தொடர்ந்து அந்த நபர், மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு நபருடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இதே போல் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெருவை சேர்ந்த ஜோதி(19) என்பவர் அதே பகுதியில் தனியாக நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.

மேலும் கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்த சங்கீதா(25) சாலையில் நடந்து சென்றபோது அவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு கூச்சல் எழுப்பியதால் தங்க சங்கிலி தப்பியது.

கடலூரில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நடந்த நகை பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட தனித்தனி புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் வண்டிப்பாளையம் சாலை மகாலட்சுமிநகரில் நடந்த நகைபறிப்பு சம்பவம் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story