கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும் - கவர்னர் வேண்டுகோள்
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு பொதுமக்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு இடங்களில் கேபிள்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருந்தன.
மேலும் காலிமனைகளிலும், ரோட்டாரமும் ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கிக்கிடந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். கேபிள் இணைப்புகளை உடனடியாக கொடுத்து ரோட்டோம் இருந்த பள்ளங்களை சரிசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
கனமழை காரணமாக கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்வார்.
இருந்தபோதிலும் அந்த மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்கவேண்டும். வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்கள் மீண்டுவர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும்.
கேரளாவில் முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவை நேசிக்கும் நாம் அனைவரும் நம்மால் ஆன அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்யவேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
ஹெல்மெட் அணியும் பிரச்சினை தொடர்பாக கவர்னர் கிரண்பெடி கூறும்போது, புதுவையில் ஹெல்மெட் அணியும் சட்டத்தை முதலில் போலீசாரும், அரசு ஊழியர்களும் மதிக்கவேண்டும். அவர்கள் 2 சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.