தனியார் உணவு விடுதியின் உரிமம் தற்காலிகமாக ரத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


தனியார் உணவு விடுதியின் உரிமம் தற்காலிகமாக ரத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2018 5:15 AM IST (Updated: 19 Aug 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் உணவு விடுதியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அதற்கான ஆணையை உணவு விடுதியின் வெளியே ஒட்டினர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான கே.எப்.சி. உணவு விடுதி உள்ளது. இங்கு சிக்கன் சம்பந்தப்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், இந்த உணவு விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தரமற்ற எண்ணெயில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த தனியார் உணவு விடுதிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். ஆனால் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், அந்த தனியார் உணவு விடுதி நிர்வாகம் இதுவரையிலும் அபராத தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

உரிமம் ரத்து

இதையடுத்து அந்த தனியார் உணவு விடுதியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதற்கான ஆணையை நேற்று திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் மற்றும் அதிகாரிகள் அந்த தனியார் உணவு விடுதியின் கண்ணாடி கதவை பூட்டி அதில் ஒட்டினர்.

அதையும் மீறி அபராததொகை செலுத்தாமல் உணவு விடுதியை தொடர்ந்து நடத்தினால் இந்த உணவு விடுதியின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது உணவு விடுதிக்கு வந்த வாடிக்கையாளர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story