திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு
தனது காதலன் திருடன் என்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிய இளம்பெண் போலீசிடம் சிக்கினார். அவரை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அடையாறு,
சென்னையில் சங்கிலி பறிப்பு, வாகன திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சென்னை போலீஸ் கமிஷனரின் உத்தரவுபடி போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே 2 வாலிபர்கள் மற்றும் ஒரு இளம் பெண் ஒரே மோட்டார் சைக்கிளில் வருவதை கண்டு அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் எனவும், மோட்டார் சைக்கிளில் வந்த ஹரிஹரன் என்ற வாலிபரும், இளம் பெண்ணும் தங்களை காதலர்கள் எனவும் கூறினர்.
காதலுக்கு எதிர்ப்பு
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணின் காதல் விவகாரம் தெரிய வந்ததையடுத்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அவரை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பூந்தமல்லியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில், காதலர்கள் செல்போனில் தொடர்ந்து பேசியுள்ளனர். அப்போது, தான் சென்னையில் இருப்பதை தெரிவித்த அந்த பெண், தன்னை வந்து அழைத்துச்செல்லும்படி கூறினார். இதையடுத்து ஹரிஹரன் தனது நண்பனுடன் சேர்ந்து அந்த பெண்னை புதுச்சேரிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
இளம்பெண் அதிர்ச்சி
ஹரிஹரன் மீது சந்தேக மடைந்த போலீசார் மேலும் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, தான் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
போலீசாரின் விசாரணையில் இந்த தகவலை கேட்ட அந்த இளம்பெண், தன் காதலர் ஒரு திருடனா? என அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது காதலை துண்டித்தார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரையும் விசாரணைக்கு பின் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story