பாட்டியின் படைப்புகள்


பாட்டியின் படைப்புகள்
x
தினத்தந்தி 19 Aug 2018 2:48 PM IST (Updated: 19 Aug 2018 2:48 PM IST)
t-max-icont-min-icon

லத்திகா சக்கரவர்த்திக்கு வயது 89. வயதை மிஞ்சிய உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக சுயதொழில் செய்து கொண்டிருக்கிறார்.

எவ்வித தடுமாற்றம் இன்றி தையல் மிஷினை சர்வசாதாரணமாக இயக்குகிறார். இவருடைய தையல் கைவண்ணத்தில் விதவிதமான டிசைன்களில் பேக்குகள், அழகுருவம் பெறுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கும் ஈடுகொடுத்து தனது படைப்புகளை காட்சிப்படுத்தி வருகிறார். இதற்காக தனது பெயரில் இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதனால் இவருடைய படைப்புகள் நாடு கடந்தும் பலருடைய கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனி, நியூசிலாந்து, ஓமன் போன்ற நாடுகளில் இவருடைய பேக்குகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

லத்திகா அசாமிலுள்ள துர்பி நகரை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த உடன் கிருஷ்ண லால் சக்கரவர்த்தி என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவர் சர்வே துறையில் பணிபுரிந் திருக்கிறார். அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பணி நிமித்தமாக கணவரோடு சென்றிருக்கிறார். அப்போது அந்தந்த மாநிலங்களின் கலாசார உடைகளை விரும்பி வாங்கியவர் அதேபோல் ஆடைகளில் டிசைன்கள் உருவாக்க விரும்பியிருக்கிறார். அதற்காக தையல்பயிற்சி பெற்று தனது குழந்தைக்கு விதவிதமான டிசைன்களில் ஆடைகளை உருவாக்கி அணிவித்து அழகு பார்த்திருக்கிறார்.

மகன் வளர தொடங்கியதும் அவன் விளையாடு வதற்காக பொம்மைகள் தயார் செய்ய பழகி இருக்கிறார். கணவன் இறந்த பிறகு தனிமை அவரை வாட்டியிருக்கிறது. அதனால் பொழுதுபோக்குக்காக மீண்டும் தையல் கலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். லத்திகாவிடம் பழைய புடவைகள், குர்தார் ஆடைகள் ஏராளம் இருந்திருக்கிறது. அவைகளை தனது தையல் கலை மூலம் பேக்குகளாக மாற்றி வருகிறார்.

பழைய துணிகளை பொலிவாக்கி சிறிய, பெரிய ரக பேக்குகளை தயார் செய்து வருகிறார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பேக்குகளை தயாரித்திருக் கிறார். அவைகளை இணையத்தில் காட்சிப்படுத்துவதற்கு அவருடைய பேத்தி ஜாய் சக்கரவர்த்தி உதவிகரமாக இருக்கிறார். அவர் தனது பாட்டியின் தனித்துவத்தையும், படைப்பாற்றலையும் இணையத்தில் பதிவிட்டு பைகளை காட்சிப்படுத்துகிறார். 

Next Story