சுற்றுலா பயணியிடம் பண மோசடி செய்த விவசாயி


சுற்றுலா பயணியிடம் பண மோசடி செய்த விவசாயி
x
தினத்தந்தி 19 Aug 2018 9:45 PM GMT (Updated: 19 Aug 2018 6:35 PM GMT)

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணியிடம் மருத்துவ குணமுள்ள பாத்திரம் தருவதாக கூறி பண மோசடி செய்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொடைக்கானல்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை குரோம்பேட்டை 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விக்ரம் (வயது 45). இவர், கடந்த ஆண்டு கொடைக்கானலில் நிலம் வாங்குவதற்காக வந்தார். அப்போது, மேல்மலைக்கிராமம் கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்த விவசாயி மகேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு நேற்று சுற்றுலா வந்தார். மன்னவனூர் பகுதிக்கு சென்ற அவர், அங்கு மகேந்திரனை சந்தித்தார். அப்போது அவர் தன்னிடம் மருத்துவ குணம் கொண்ட பாத்திரம் உள்ளதாகவும், அதில் சமைத்து சாப்பிட்டால் எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவை குணமாகும் என்றும் கூறினார். மேலும் அந்த பாத்திரத்தின் விலை ரூ.10 லட்சம் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனை உண்மை என நம்பிய விக்ரம், தன்னிடம் ரூ.25 ஆயிரம் மட்டுமே உள்ளதாகவும், மீதம் உள்ள தொகையை பின்னர் தருவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பாத்திரத்தை ரூ.25 ஆயிரத்தை கொடுத்து விக்ரம் பெற்றுக் கொண்டார். பின்னர் கொடைக்கானலில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்து பாத்திரத்தை நண்பர்களிடம் காட்டினார்.

இதைப் பார்த்த நண்பர்கள், அது சாதாரண பாத்திரம் என்று தெரிவித்தனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மகேந்திரனின் செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் விக்ரம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்ஸ்டர் பொன் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story