அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு


அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு
x
தினத்தந்தி 20 Aug 2018 3:15 AM IST (Updated: 20 Aug 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்துரை வெளிநடப்பு செய்தார்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வருகிற 26-ந்தேதி அ.ம.மு.க. கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல் மாநகர மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான தங்கத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முக்கிய நிர்வாகி ஒருவரின் பெயரை கூறாமல் விட்டதாகவும், கட்சி பொறுப்பில் இல்லாத ஒருவரின் பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவர் பேச்சை பாதியிலேயே நிறுத்தினார்.

அப்போது சிலர் நாற்காலிகளை தூக்கி வீசத் தொடங்கினர். இதில் சில நாற்காலிகள் மேடையின் பின்வரிசையில் போய் விழுந்தன. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கத்துரை தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதற்கிடையே தங்க தமிழ்செல்வன், தலையிட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அமைதிப்படுத்தினார். இதையடுத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், கூட்டத்தில் இருந்து வெளியேறிய தங்கத்துரை உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், நிர்வாகிகள் தங்களுடைய கருத்தை தாராளமாக பதிவு செய்யலாம். ஆனால், கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடாது. இந்த கூட்டத்தில் நாற்காலிகளை வீசிய அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் ஒட்டன்சத்திரத்தில் 26-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும், என்றார். 

Next Story