காணாமல் போன பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் பிணமாக மீட்பு


காணாமல் போன   பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 3:15 AM IST (Updated: 20 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே காணாமல் போன பள்ளி மாணவர்கள் 2 பேர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பூமிநாதன். கூலித்தொழிலாளி. இவரது மகன் தினேஷ்(வயது9), அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இதே தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் கார்த்திக்பாலா(5) 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 16-ந்தேதி இவர்கள் இருவரும் வெளியில் விளையாட செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களில் மாணவர்களை தேடிவந்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கோம்பை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் குடியிருப்பு அருகே உள்ள புதுக்குளத்திற்கு மாணவர்கள் குளிக்க சென்று இருப்பார்களோ? என்று போலீசார் சந்தேகப்பட்டு புதுக்குளத்தில் தேடுவதற்கு முடிவு செய்தனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் புதுக்குளம் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், உத்தமபாளையம் தீயணைப்புநிலைய அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 15 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் குளத்தில் மாணவர்களை தேடினர்.

புதுக்குளம் 500 ஏக்கர் பரப்பில் அமைந்து இருப்பதால் மாணவர்களை தேடுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக ‘ஹெலிகேம்’ மூலம் தேடினார்கள். அப்போது ஆழமான பகுதியில் சேற்றில் மாணவர்களின் உடல்கள் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத்தில் தீயணைப்புவீரர்கள் தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்களையும் பிணமாக மீட்டனர். அவர்களின் உடல்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களை குளத்தில் படகு மூலம் தேடி வருவதை அறிந்து கரையோரம் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். குளத்தில் மூழ்கி மாணவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story