தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தே.மு.தி.க. நிரப்பும் எல்.கே.சுதீஷ் பேச்சு


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தே.மு.தி.க. நிரப்பும் எல்.கே.சுதீஷ் பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2018 4:15 AM IST (Updated: 20 Aug 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தே.மு.தி.க. நிரப்பும் என்று தர்மபுரியில் நடந்த கட்சி ஆய்வுக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள், செயல்வீரர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், மாநில தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் விஜய் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்புவிஜய் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் டாக்டர் இளங்கோவன், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, அக்பர் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை தே.மு.தி.க.விற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய பெரிய தலைவர்கள் மறைந்து விட்டதால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்து உள்ளது. தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கவோ, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவோ வாய்ப்பு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தே.மு.தி.க.வை மக்கள் விரும்புகிறார்கள். விஜயகாந்த் தமிழகத்தில் நல்லாட்சியை தருவார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை தே.மு.தி.க. நிரப்பும். தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும் அதில் தே.மு.தி.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியின் அவலங்கள் குறித்து பொதுமக்கள் நன்றாக அறிந்து உள்ளனர். தே.மு.தி.க. ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இப்போதே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் மணி முனியப்பன், தனபால், கோபிநாத், செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, விஜயசங்கர், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Next Story