எமரால்டில் மழையால் சேதமான 4 வீடுகளுக்கு இழப்பீடு, கலெக்டர் வழங்கினார்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
மஞ்சூர், ஆக.20–
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் எமரால்டு நேரு நகரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோன்று கோத்தகண்டி வ.உ.சி.நகரை சேர்ந்த மற்றொரு பாஸ்கரன், பத்மநாபன், சரோஜா ஆகிய 3 பேரின் வீடுகளும் சேதம் அடைந்தன. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, பேரிடர் மீட்புக்குழு கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி.காம்ளே மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை உரிமையாளர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
அவலாஞ்சி அணை திறக்கப்பட்டு உள்ளதால் கரையோரங்களில் உள்ள 15–க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். அவர்களில் 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.