மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.1 லட்சத்து 22 ஆயிரம்–ஸ்கூட்டர் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வாட்டாத்திக்கோட்டை அருகே மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ஸ்கூட்டரை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது44). இவர் கழுகப்புலிக்காடு கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுக்கடையை பூட்டி விட்டு மது விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 860–ஐ எடுத்துக்கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அலிவலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். இவர்கள் 2 பேரும், பெருமாளை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணம், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பெருமாள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருமாள், வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பணத்தையும், ஸ்கூட்டரையும் பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.