சூடியூர் வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சூடியூர் வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 3:15 AM IST (Updated: 20 Aug 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே சூடியூர் வைகை ஆற்றுப்பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே சூடியூர் கிராம வைகை ஆற்றுப்பகுதியில் மணல் எடுக்க பொதுப்பணித்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சூடியூர், அருளானந்தபுரம், நெடும்புலி, திருவரங்கி, இடையர் குடியிருப்பு, அழகன்பச்சேரி, வடக்கூர், மேலப்பார்த்திபனூர், பரளை, பொன்னக்கரை, கள்ளிக்குடி, மரிச்சுக்கட்டி, மேலப்பெருங்கரை, கீழப்பெருங்கரை உள்பட 20–க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சூடியூர் வைகை ஆற்றுப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆழ்துளை அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சூடியூர் கிராம வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரிகள் அமைத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பாதிப்படையும் என அப்பகுதி மக்கள் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காத பொதுப்பணித்துறையையும், அரசையும் கண்டித்து பார்த்திபனூரில் வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.

தொடர்ந்து அரசு சூடியூர் கிராம வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரிகள் அமைத்தால் எங்களுடைய ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைத்து விட்டு கிராமத்தை விட்டு காலி செய்ய உள்ளோம் என்று கூறினர்.


Next Story