எந்த நேரத்திலும் வரும் சரக்கு லாரிகள்; பொதுமக்கள் கடும் அவதி


எந்த நேரத்திலும் வரும் சரக்கு லாரிகள்; பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 20 Aug 2018 4:02 AM IST (Updated: 20 Aug 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் பஜாருக்கு எந்த நேரத்திலும் சரக்கு லாரிகள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர், 


ஆம்பூர் பஜார் பகுதியில் காய்கறி, பூக்கடை, பழக்கடை, நகைக்கடை, மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி விற்கும் கடை என அனைத்தும் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பஜார் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இங்கு பொதுமக்கள் வாகனங்களை விட்டு செல்வதற்கு என தனியாக பார்க்கிங் வசதி எதுவும் கிடையாது. இதனால் பஜாருக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை அந்தந்த கடை முன்பு நிறுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டு தேவைக்கு பொருள் வாங்க ஆம்பூர் பஜார் பகுதிக்கு தான் தினசரி வந்து செல்ல வேண்டும்.

இதனால் பஜார் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் காலை 11 மணிக்கு மேல் தான் பஜாருக்குள் வர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எந்த லாரி டிரைவர்களும் பின்பற்றுவது கிடையாது. காலையில் பஜாருக்குள் வரும் லாரிகள் நினைத்த நேரத்துக்கு வெளியில் செல்வதும், உள்ளே வருவதும் என்ற நிலை இன்று வரை நீடித்து வருகிறது.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆட்டோ வந்து விட்டால் அந்த இடத்தை விட்டு பொதுமக்கள் கடந்து செல்ல அரை மணி நேரம் ஆகுவதோடு மட்டுமில்லாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் லாரி டிரைவர்களிடம் கேட்டால் நாங்கள் அப்படிதான் இறக்குவோம் என்று மிரட்டுகின்றனர். இதனால் நாள்தோறும் பஜாரில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி ஆங்காங்கே தகராறு நடப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும் பள்ளிக்கூடம், தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பஜார் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு காலை 7 மணிக்கு பஜாருக்குள் லாரியை வரவழைத்து அதில் இருந்து பொருட்களை இறக்குவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடப்பதை குறைக்கவும் போக்குவரத்து போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. பஜார் பகுதியில் போக்குவரத்து போலீசார் இருந்தும் குறிப்பிட்ட லாரிகள் மட்டும் பஜாருக்குள் வந்து சரக்குகளை இறக்கி செல்கின்றன.

இதுகுறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை போக்குவரத்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தும், போலீசார் அதனை கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக ஆம்பூர் பஜாருக்குள் எப்போது வேண்டுமானாலும் சரக்கு லாரிகள் வந்து செல்லும் நிலை உள்ளது. இனியாவது பஜார் பகுதிக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே சரக்கு லாரிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அங்கு எப்போதும் போக்குவரத்து போலீசாரை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பஜாரில் கடை நடத்துபவர்கள் கூறும்போது ‘பஜார் பகுதிக்குள் காலை 11 மணிக்கு மேல்தான் லாரிகள் வர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில லாரிகள் காலை நேரத்திலேயே வந்து சரக்குகளை இறக்குகின்றன. போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே லாரிகளை உள்ளே அனுப்ப நடவடிக்கை எடுத்தால் நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம்’ என்றனர்.

நகரப்பகுதியில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் உள்ளே வரவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் ஆம்பூர் நகரம் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்போது வேண்டுமானாலும் லாரிகள் வரும் அவலநிலை உள்ளது. எனவே ஆம்பூர் போக்குவரத்து போலீசார் இனிமேலாவது காலை நேரத்தில் பஜாருக்குள் வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story