வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர்
கதவணைகளில் ஷட்டர் பொருத்தாததால் வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக காவிரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வரும். பின்னர் அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடையும். கீழணையில் இருந்து பிரிந்து வரும் வடக்கு ராஜன் பாசனவாய்க்கால் கஞ்சன்கொல்லை, எய்யலூர், ஓமாம்புலியூர், முட்டம், ம.புளியங்குடி, குமராட்சி வழியாக சிதம்பரம் கடைமடை பகுதிகள் வரை செல்லும். இதில் இருந்து வரும் தண்ணீரை விவசாய பயன்பாட்டுக்காக தேக்கி வைத்து உள்ளூர் பாசனத்துக்கு அனுப்புவதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வடக்குராஜன் வாய்க்காலில் ஆங்காங்கே கதவணைகள் கட்டப்பட்டன.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்தது. அங்கிருந்து வடக்குராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 200 முதல் 500 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
குடிமராமத்து பணியின் கீழ் உள்ளூர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் ராஜன்வாய்க்காலில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க தற்போது ஓமாம்புலியூர் மற்றும் ம.புளியங்குடி பகுதி ராஜன் வாய்க்காலில் உள்ள கதவணைகளின் ஷட்டர்கள் பழுதடைந்தால் அவைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
புதிய ஷட்டர்கள் அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தமும் தனியாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஷட்டர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் வடக்குராஜன் வாய்க்காலில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் காவிரிநீர் வீணாக பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கீழணை திறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் டெல்டா பகுதிகளுக்கு கடைமடைவரை தண்ணீர் செல்லவில்லை. மாறாக கொள்ளிடம் வழியாக கடலுக்கு வீணாக திறந்துவிடப்படுகிறது. இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக ரூ.6 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பாக ஓமாம்புலியூர் மற்றும் ம.புளியங்குடி ராஜன் வாய்க்கால் கதவணைகளில் ஷட்டர்கள் மாற்றுவதற்கு ரூ.20 லட்சம் தனியாக ஒதுக்கப்பட்டது. இதில் எந்த பணியும் முறையாக நடைபெற வில்லை. வடக்குராஜன் வாய்க்காலில் 2 கதவணைகளில் அகற்றப்பட்ட ஷட்டர்கள் புதிதாக அமைக்கவில்லை. ஷட்டர்கள் இருந்திருந்தால் அங்கிருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கும், ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கலாம். எனவே கதவணைகளில் உடனடியாக ஷட்டர்கள் பொருத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story