கோவில்களில் உள்ள சாமி சிலைகள் கொள்ளை போவதை தடுக்கக்கோரி பழனி முருகன் கோவில் உண்டியலில் மனு போடுவதற்கு சென்ற இந்து முன்னணியினர்
கோவில்களில் உள்ள சாமி சிலைகள் கொள்ளை போவதை தடுக்கக்கோரி பழனி முருகன் கோவில் உண்டியலில் மனு போடுவதற்கு திருப்பூரில் இருந்து இந்து முன்னணியினர் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
திருப்பூர்,
தமிழகத்தில் கோவில் சொத்துக்களை பாதுகாக்கக்கோரியும், சாமி சிலைகள் கொள்ளை போவதை தடுக்கவும், இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கோவில் உண்டியல்களில் மனு போடும் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று பழனியில் உள்ள முருகன் கோவில் உண்டியலில் மனு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக திருப்பூரில் இருந்து பழனிக்கு இந்து முன்னணி தொண்டர்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகம் முன்பு தொடங்கியது. ஊர்வலத்தை மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாகனங்களில் பழனி வரை ஊர்வலமாக சென்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோரிக்கை அடங்கிய மனுவை உண்டியலில் போட்டு முறையிட்டனர். இதில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் குணா, செந்தில்குமார், சேவுகன், சண்முகம், கோட்ட செயலாளர்கள் பாலன், கிருஷ்ணன், கோவிந்த் உள்பட கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.