கரும்பு, வாழை தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது
தேவூர், எடப்பாடி பகுதிகளில் கரும்பு, வாழை தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
தேவூர்,
மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் வெளியேறி வரும் காவிரி வெள்ளம் தேவூர் அருகே காவேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள பல வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் வாழை, மஞ்சள், கரும்பு, வெண்டை, பருத்தி உள்ளிட்ட விவசாய பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தேவூர் அருகே கொட்டாயூர் ஆத்துக்காடு பகுதியில் உள்ள சுடுகாட்டையும், காணியாளம்பட்டி சுடுகாட்டையும் தண்ணீர் மூழ்கடித்துள்ளது.
தேவூர் அருகே காவிரி கரையோரங்களில் உள்ள சுடுகாடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.
கோம்புக்காடு பகுதியில் இருந்து பூச்சமரத்துக்காடு பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் வழிப்பாதையில் உள்ள பாலம் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கோம்புக்காடு கிராமமக்கள் சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றி பூமணியூர் வழியாக கோனேரிப்பட்டி பகுதிக்கு சென்று வருகின்றனர்.
கோனேரிப்பட்டி, கோம்புக்காடு, கொட்டாயூர், கல்வடங்கம், காவேரிப்பட்டி, அண்ணமார் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி, ராமக்கூடல், புளியம்பட்டி, வேலாத்தா கோவில் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி கரையோரங்களில் வருவாய்த்துறையினர், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருகரையையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் கார், மோட்டார்சைக்கிள்களில் வந்து பூலாம்பட்டி காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து ரசித்தனர்.
நெரிஞ்சிப்பேட்டை தடுப்பணையில் உள்ள அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதனை காணவும் ஏராளமானோர் இங்கு வந்து சென்றனர். காவிரி ஆற்றில் குளிக்க அனுமதியில்லாததால் ஏராளமானோர் பூலாம்பட்டி அருகில் செல்லும் மேட்டூர் வலதுகரை கால்வாயில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் பூலாம்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ராசிபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் மின்மோட்டார் அறை வரை தண்ணீர் நிரம்பியதால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. நாவிதன்குட்டை பகுதியில் பூலாம்பட்டி நெடுங்குளம் செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்ததால் நேற்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோளப்பாறை, நாவிதன்குட்டை, நெரிஞ்சிப்பேட்டை தடுப்பணை பகுதியில் உள்ள கரும்பு, பருத்தி, வாழை தோட்டங்களில் காவிரி வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மேலும் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மரங்களையும் காவிரி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்டுள்ள சேத மதிப்புகளை கணக்கிடும் பணியிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story