வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது 150 பவுன் நகைகள் பறிமுதல்


வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது 150 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:57 AM IST (Updated: 20 Aug 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ஷேசாங்சாய் உத்தரவின் பேரில் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேளச்சேரி 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை நிறுத்திய போலீசார், அவரிடம் ஆவணங்களை கேட்டனர்.

ஆனால் அவரிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிவந்தது தெரிந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், செங்குன்றத்தை சேர்ந்த அனுப்குமார் (வயது 28) என்பதும், பிரபல கொள்ளையனான அவர், வேளச்சேரி உள்பட பல பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து அனுப் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகைகளை கைப்பற்றினர். மேலும் அனுப்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story