மண் சரிவில் சிக்கிய அரசு பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மாஞ்சோலை அருகே அரசு பஸ் மண் சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அம்பை,
நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக ஊத்து பகுதிக்கு ஒரு அரசு பஸ் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சில் கபாலிபாறையை சேர்ந்த செல்லப்பா டிரைவராகவும், ராஜேந்திரன் கண்டக்டராகவும் இருந்தனர்.
பஸ் ஊத்து பகுதிக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டது. அப்போது பஸ்சில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். பஸ் மாலை 6.30 மணிக்கு மாஞ்சோலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக பஸ்சில் இருந்து பத்திரமாக இறங்கினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் வேறு பஸ்சில் ஏறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். மலைப்பகுதியில் பஸ் சிக்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டிரைவர் செல்லப்பா பாபநாசம் பணிமனைக்கு தகவல் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் அந்த பஸ்சை மீட்க, மீட்பு வாகனத்தை அனுப்பி வைத்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி நேற்று மதியம் அந்த பஸ் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story